VIDEO: மர்மமான முறையில் சேர்க்கப்பட்ட 40 லட்சம் வாக்காளர்கள் - ராகுல்காந்தியின் 'அணுகுண்டு' ஆதாரம்
- சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தார்.
- வெறும் 5 மாதங்களில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் வந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக 100 சதவீதம் உறுதியான, அணுகுண்டு போன்ற ஆதாரங்கள் உள்ளதாக ராகுல் தெரிவித்திருந்த நிலையில் இன்று மதியம் டெல்லியில் இதுதொடர்பான சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
அதில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல், மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.
அதில், மகாராஷ்டிராவில் 40 லட்சம் வாக்காளர்கள் மர்மமான முறையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
"மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள், சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டது என்ற எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில், வெறும் 5 மாதங்களில் ஒரு கோடி வாக்காளர்கள் புதிதாக வந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.
எங்கள் வாதத்தின் மையக்கரு மகாராஷ்டிரா தேர்தல் திருடப்பட்டது என்பதுதான். பிரச்சினையின் மையக்கரு வாக்காளர் பட்டியல். அது இந்த நாட்டின் சொத்து.
தேர்தல் ஆணையம் எங்களுக்கு வாக்காளர் பட்டியலைத் தர மறுக்கிறது. பின்னர் ஒரு படி மேலே சென்று வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை அழிக்கப் போகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள்.
இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் மகாராஷ்டிராவில் மாலை 5.30 மணிக்குப் பிறகு அதிக வாக்குப்பதிவு நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் வாக்குச் சாவடிகளில், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது எங்களுக்கு தெரியும். மாலை 5.30 மணிக்குப் பிறகு அதிக வாக்குப்பதிவு இல்லை.
இந்த இரண்டு விஷயங்களும் இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களைத் திருடுகிறது என்பதை உறுதிப்படுத்தின" என்று தெரிவித்தார்.