இந்தியா

உயரத்தால் ஏற்பட்ட அவமானம்: தடைகளைத் தாண்டி சாதித்த டாக்டர்

Published On 2024-03-07 09:32 GMT   |   Update On 2024-03-07 10:06 GMT
  • 3 அடி உயர கணேஷ் பரையா டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவை நனவாக்க முயற்சிகள் எடுத்து வந்தார்.
  • கணேஷ் தற்போது படிப்பை முடித்து பயிற்சி டாக்டராக பவ் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் பவ் நகரைச் சேர்ந்தவர் கணேஷ் பரையா (23). இவரது உயரம் 3 அடி. ஆனாலும், டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவை நனவாக்க முயற்சிகள் எடுத்து வந்தார்.

பிளஸ் 2 முடித்ததும் மருத்துவப் படிப்புக்கு கணேஷ் விண்ணப்பித்தார். அவரது உயரத்தை காரணம் காட்டி இந்திய மருத்துவ கவுன்சில் அவரது விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் சோர்ந்து போகாத அவர், கல்லூரி முதல்வர் உதவியுடன் குஜராத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

குஜராத் நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் மனதை தளரவிடாத அவர், 2018ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

அதன்படி 2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த கணேஷ், தற்போது படிப்பை முடித்து பயிற்சி டாக்டராக பவ் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

தனது இந்த பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட கணேஷ் பாரையா,

மருத்துவக் கல்விக்கு விண்ணப்பிக்கும்போது, எனது உயரத்தை காரணம் காட்டி மருத்துவ கவுன்சில் நிராகரித்துவிட்டது. இதனால் பள்ளி முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றேன். டாக்டராகப் போகிறேன் என பெற்றோரிடம் கூறுகையில் அவர்களே சந்தேகத்துடன் பார்த்தனர். போகப் போக என்னைப் புரிந்து கொண்டனர் என தெரிவித்தார்.

குள்ளமான இளைஞர் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு டாக்டர் பணிக்கு சேர்ந்த சம்பவம் குஜராத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News