null
26/11 மும்பை தாக்குதல்: விசாரணையில் தஹாவூர் ராணா அளித்த பரபரப்பு வாக்குமூலம்
- இந்த நிறுவனத்தின் போர்வையில், ஹெட்லி இந்தியாவின் பல நகரங்களுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்தார்.
- பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்டன் பதவியில் மருத்துவராக முன்பு பணியாற்றியதாக ராணா தெரிவித்தார்.
மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல் வழக்கின் முக்கிய சதிகாரரான தஹாவூர் உசேன் ராணா, விசாரணையின் போது பரபரப்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அவர் மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு விசாரணையின் போது தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சதியை வெளிப்படுத்தியுள்ளார்.
தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட டேவிட் கோல்மன் ஹெட்லிக்கு அவர் எவ்வாறு உதவினார் என்பதை அவர் விரிவாக விளக்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்த நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் இருந்ததாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் முகவராகப் பணியாற்றி வந்ததாகவும் ராணா தெரிவித்தார்
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் போன்ற முக்கிய பகுதிகளை இலக்குகளாக அடையாளம் காண ஹெட்லிக்கு உதவியதாக ராணா தெரிவித்தார்.
தாக்குதல்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் கண்காணிப்பை மேற்கொள்ள 'இம்மிகிரண்ட் லா சென்டர்' என்ற முன்னணி நிறுவனத்தை அமைக்கும் யோசனை தனக்கு இருந்ததாக ராணா ஒப்புக்கொண்டார். இந்த நிறுவனத்தின் போர்வையில், ஹெட்லி இந்தியாவின் பல நகரங்களுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்டன் பதவியில் மருத்துவராக முன்பு பணியாற்றியதாக ராணா தெரிவித்தார். பாகிஸ்தான் இராணுவ அமைப்பு, உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளுடன் தான் தீவிரமாக ஒருங்கிணைந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சஜித் மிர், அப்துல் ரெஹ்மான் பாஷா மற்றும் மேஜர் இக்பால் போன்ற பாகிஸ்தான் அதிகாரிகளை தனக்குத் தெரியும் என்றும் ராணா ஒப்புக்கொண்டார்.
நவம்பர் 2008 தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, மும்பையின் பவாய் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், தாக்குதல்களுக்கு முன்பு துபாய் வழியாக பெய்ஜிங்கிற்குச் சென்றதாகவும் ராணா விசாரணையில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ராணாவின் பங்கை 14 சாட்சிகள் உறுதிப்படுத்தியதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.