இந்தியா
சித்ரா ராமகிருஷ்ணா

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு- சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Published On 2022-03-28 10:16 GMT   |   Update On 2022-03-28 15:19 GMT
பங்கு சந்தையின் ரகசிய தகவல்களை இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தேசிய பங்குச்சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை கசிய விட்ட விவகாரத்தில், தேசிய பங்குச்சந்தை முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 11ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், சித்ரா ராமகிருஷ்ணாவின் கையெழுத்து மாதிரிகளை கேட்டு, சிபிஐ தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் தேசிய பங்குச்சந்தையில் பணி நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. பங்கு சந்தையின் ரகசிய தகவல்களை இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் பகிர்ந்ததாகவும் புகார் எழுந்தது. 

இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா விதிமீறலில் ஈடுபட்டது உறுதியானதால் அவருக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன், சிஓஓ ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கும் தலா ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து சிபிஐ விசாரணை நடத்தி சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News