இந்தியா
பிரதமர் மோடி

தானே- திவா இடையே புதிய ரெயில் தடங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Published On 2022-02-18 17:49 IST   |   Update On 2022-02-18 17:49:00 IST
தானே - திவா இடையே இரண்டு புதிய வழித்தடங்கள் இயக்கப்படுவதன் மூலம், மத்திய ரெயில்வேயின் பிரதான பாதையில் 36 கூடுதல் புறநகர் ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மற்றும் திவாவை இணைக்கும் இரண்டு புதிய ரெயில் தடங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். மேலும், இரண்டு புறநகர் ரெயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தானே - திவா இடையே இரண்டு புதிய வழித்தடங்கள் இயக்கப்படுவதன் மூலம், மத்திய ரெயில்வேயின் பிரதான பாதையில் 36 கூடுதல் புறநகர் ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். மேலும், குளிரூட்டப்பட்ட உள்ளூர் ரெயில் சேவைகள் 10-ல் இருந்து 44-ஆக உயரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய வழித்தடங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பின்பு காணொளி வாயிலாக பேசியதாவது:-

நமது நாட்டில் ரெயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனது அரசு உறுதியாக உள்ளது. முன்பு உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்துவதில் சரியான திட்டமிடுதலும், ஒருங்கிணைப்பும் இல்லாததால் இழுத்தடிக்கப்பட்டன. ஆனால் நாங்கள் அந்த அணுகுமுறையை மாற்றியுள்ளோம்.

ரெயில்வே துறையை நவீனமாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் வசதியானதாகவும் மாற்றுவதே நமது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று. இதற்காக கொரோனாவால் கூட எங்கள் உறுதிப்பாட்டிலிருந்து திசைத்திருப்ப முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் சரக்கு போக்குவரத்தில் ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பாஜக-வுக்கு அடிப்பணியாததால் லாலு துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்- பிரியங்கா காந்தி

Similar News