செய்திகள்

விடுதலைப்புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை - மத்திய அரசு

Published On 2019-05-14 03:00 GMT   |   Update On 2019-05-14 08:25 GMT
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

இலங்கையில் ஈழத் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்பட்டதால் அவர்கள் உரிமைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 1976-ம் ஆண்டு உரிமைக்காக ஆயுதம் ஏந்தும் போராட்டம் தொடங்கியது. பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் உருவானது.

சிங்கள ராணுவத்தினரை குறி வைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். அந்த இயக்கத்தில் இருந்த இளைஞர்கள் சுதந்திர தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதற்காக தங்களது உயிரையும் மாய்த்து கொண்டனர். அந்த வகையில் 18 ஆயிரத்து 742 பேர் மாவீரர்களாக மாறி உள்ளனர்.

ஆனால் 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவித்தது. 1992-ம் ஆண்டு முதல் இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை இருந்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடையை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. இந்தியா போன்று அமெரிக்கா, மலேசியா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு உள்பட 32 நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதித்து உள்ளது.

இதற்கிடையே கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றிலுமாக இலங்கை ராணுவம் தோற்கடித்தது. அதன் பிறகு விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் முடங்கின. தற்போது விடுதலைப்புலிகள் பெயரில் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை.

என்றாலும் இந்தியாவில் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமலில் உள்ள தடை விரைவில் முடிய உள்ளது.



இதையடுத்து விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டிப்பு செய்து இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்பட வைக்க முயற்சிகள் நடக்கிறது. அதன் ஆதரவு இயக்கங்களுடன் சேர்ந்து இந்த முயற்சிகள் நடந்து வருகின்றன. எனவே விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சட்ட விரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டு வரை தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கம் தற்போது ஆயுதம் ஏந்துவதை கைவிட்டு இருப்பதால் உலகின் பல்வேறு நாடுகளிலும் அந்த இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியது.

கனடாவிலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்தியாவில் முன் எச்சரிக்கை காரணமாக விடுதலைப்புலிகளின் மீதான தடை தொடர்ந்து அமலில் உள்ளது.
Tags:    

Similar News