செய்திகள்

பானி புயல் தாக்கத்துக்கு ஒடிசாவில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

Published On 2019-05-12 15:42 GMT   |   Update On 2019-05-12 15:42 GMT
பானி புயலின் கோரத்தாண்டவத்தால் சின்னாபின்னமான ஒடிசா மாநிலத்தில் புயலின் தாக்கத்தினால் மேலும் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
புவனேஸ்வர்:

வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த மூன்றாம் தேதியன்று காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.

நவீன கருவிகள் மூலம் பானி புயலின் பயணப் பாதையை மிக துல்லியமாக கணித்து இருந்ததால் அது செல்லும் பகுதிகளில் இருந்து சுமார் 12 லட்சம் மக்களை ஒடிசா மாநில அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தது. இந்த முன் எச்சரிக்கை காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். விழுந்த மரங்களுக்கு பதிலாக போர்க்கால அடிப்படையில் புதிய மரங்கள் நடப்படும் என அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி பானி புயலின் தாக்கத்துக்கு  மேலும் 21 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News