செய்திகள்

தேஜ் பகதூரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்- மோடியை எதிர்க்கும் முயற்சி தோல்வி

Published On 2019-05-09 16:16 IST   |   Update On 2019-05-09 16:16:00 IST
வாரணாசியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் தேஜ்பகதூர் யாதவ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #TejBahadurYadav #Varanasi
புதுடெல்லி:

ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  ஆனால், வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் அவரது வேட்பு மனுவை நிராகரித்தது.

ஆனாலும், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் உறுதியாக இருந்த தேஜ் பகதூர் யாதவ், தனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அவரது மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். அப்போது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக் காட்டிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது தேர்தல் வழக்கு தொடரலாம் என தெரிவித்தார்.

ஆனால், பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதாடிய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, தேர்தல் முடிந்தபிறகுதான் தேர்தல் தொடர்பான வழக்குகளை தொடர முடியும் என்றார்.

அப்படியென்றால் தேர்தல் முடிந்தபிறகு தனது கட்சிக்காரர், இந்த வழக்கை மீண்டும் தொடர அனுமதிக்கும்படி பிரசாந்த் பூஷன் கேட்டுக்கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேஜ் பகதூர் யாதவின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதன்மூலம் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் முயற்சி தோல்வி அடைந்தது. #TejBahadurYadav #Varanasi
Tags:    

Similar News