செய்திகள்

குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க திடீர் சதி- சித்தராமைய்யா ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம்

Published On 2019-04-29 10:29 GMT   |   Update On 2019-04-29 10:29 GMT
கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து விட்டு சித்தராமைய்யா முதல்வர் ஆகும் முயற்சியில் தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். #Kumaraswamy #Siddaramaiah #congress

பெங்களூர்:

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர் எடியூரப்பா 4 தடவை முயற்சி செய்தார். ஆனால் 4 தடவையும் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

காங்கிரசில் சில எம்.எல். ஏ.க்கள் குமாரசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். ஆனால் அதில் இன்னும் பலன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி எதிர்பார்த்து போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக ரமேஷ் ஜார்கிகோலி, நாகேந்திரா, மகேஷ் கும்தஹள்ளி, பீம நாயக், காம்ப்ளி கணேஷ் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமி ஆட்சியை கவிழ்ப்போம் என்று மிரட்டல் விடுத்தப்படி இருக்கிறார்கள்.

இந்த அதிருப்தி எம்.எல். ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சிகளை குமாரசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டு ராவ் மேற்கொண்டுள்ளனர். நேற்று அவர்கள் மூவரும் சில அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்கள்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அமைச்சரவையை மாற்றலாம் என்று அப்போது பேசப்பட்டது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பதவிகள் வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமைய்யாவும் மீண்டும் முதல்-மந்திரி பதவியை பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறார். குமாரசாமியை ஒதுக்கி விட்டு பதவியை கைப்பற்ற வேண்டும் என்று அவர் கருதுகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களை அவர் தூண்டி விட்டுள்ளார்.

அவரது ஆதரவாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் சோமசேகர் எம்.எல்.ஏ. என்பவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை ரகசியமாக கூட்டி உள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பலருக்கும் கூட்டத்துக்கு வரும்படி ரகசிய கடிதம் அனுப்பி உள்ளார்.


இது குமாரசாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை கவிழ்த்து விடுவார்களோ என்ற புதிய தலைவலியை குமாரசாமி எதிர்கொண்டுள்ளார். #Kumaraswamy #Siddaramaiah #congress

Tags:    

Similar News