தமிழ்நாடு செய்திகள்

போகி பண்டிகை கொண்டாட்டம் - சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

Published On 2026-01-14 07:45 IST   |   Update On 2026-01-14 07:45:00 IST
  • தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
  • தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர்.

போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தயாராவதற்கான நாளாகவும் போகி பண்டிகை கருதப்படுகிறது.

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து "பழையன கழிதலும், புதியன புகுதலும்.." என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். மேலும் போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடினர்.

இந்நிலையில் போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னையில் கடும் புகைமூட்டம் நிலவுகிறது. பழைய பொருட்களை எரித்ததால் எதிரில் வருவோர் தெரியாத அளவுக்கு சென்னையில் புகை காணப்பட்டது.

காற்றின் தரக்குறியீடு மணலியில் 140, எண்ணூரில் 116, கொடுங்கையூரில் 107, அரும்பாக்கத்தில் 111, வேளச்சேரியில் 76 ஆக பதிவாகி உள்ளது. பெருங்குடியில் 100 ஆகவும், ராயபுரத்தில் 52 ஆகவும் பதிவாகி உள்ளது. தமிழத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 196 ஆக பதிவாகி உள்ளது.

காற்று மாசு அதிகரிப்பால் சாலையில் வாகன ஓட்டிகள், வயதானவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News