செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2019-04-23 08:12 GMT   |   Update On 2019-04-23 08:12 GMT
ரபேல் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #RahulGandhi #ContemptNotice #Rafale
புதுடெல்லி:

ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், எந்த முறைகேடும் நடந்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது. அதன்பின்னர், ஆங்கில நாளிதழில் வெளியான ரகசிய ஆவணங்களை சுட்டிக்காட்டி, ரபேல் விவகாரம் குறித்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.



இதற்கிடையே தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடியை ராகுல்காந்தி தரம் தாழ்ந்த வகையில் பேசினார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டார் என்று அவர் பேசினார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நேற்றைய விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கவேண்டும் என ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். அத்துடன், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சீராய்வு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். #RahulGandhi #ContemptNotice #Rafale

Tags:    

Similar News