செய்திகள்

ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி- காங்கிரஸ் பரபரப்பு புகார்

Published On 2019-04-11 07:54 GMT   |   Update On 2019-04-11 09:59 GMT
அமேதி மனுதாக்கலின்போது ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. #Congress #RahulGandhi
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக அவர் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ நடத்தினார்.

அந்த ரோடு ஷோவில் அவரது சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, அவர்களது மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த ரோடு ஷோவின் போது ராகுல் மீது சாலையின் இரு புறமும் திரண்டிருந்த தொண்டர்கள் மலர்களை தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மிக எழுச்சியுடன் இந்த ரோடு ஷோ நடந்து முடிந்தது.


இந்த நிலையில் ராகுல் நடத்திய அந்த ரோடு ஷோவில் அவரை கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் மனுதாக்கல் செய்தபோது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ரோடு ஷோவில் அவரை நோக்கி லேசர் கதிர்கள் வந்தன.

அமேதி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து விட்டு வந்தபிறகு ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போதும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.

ராகுலை நோக்கி மீண்டும் லேசர் கதிர்கள் பாய்ந்தன. பச்சை நிறத்தில் வந்த அந்த லேசர் கதிர்கள் அவரது தலை மீது குறி பார்த்து வந்தன.

7 தடவை அவர் மீது லேசர் கதிர் பாய்ந்தது. நீண்ட தூரத்தில் இருந்து ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் உயிருக்கு குறி வைத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வி‌ஷயத்தில் மத்திய உள்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

காங்கிரசின் இந்த புகார் காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #RahulGandhi
Tags:    

Similar News