செய்திகள்

வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றுவது இல்லை - மத்திய மந்திரி பியூஷ்கோயல் குற்றச்சாட்டு

Published On 2019-04-06 22:46 GMT   |   Update On 2019-04-06 22:46 GMT
வாக்குறுதி அளித்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம் என்று ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார். #PiyushGoyal #BJP #Congress
புதுடெல்லி:

வாக்குறுதி அளித்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம் என்று ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தற்போது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளது. இந்த வாக்குறுதியை கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலிலும் சோனியா காந்தி கூறினார். ஆனால் இந்த வாக்குறுதியை அந்த கட்சி நிறைவேற்றவில்லை. மோடி அரசு பதவி ஏற்கும்போது 18,452 கிராமங்கள் மின்சார வசதி இல்லாமல் இருந்தது.

அவர்களின் வாக்குறுதியை கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு நிறைவேற்றி உள்ளது. தற்போது நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோல் 2004 மற்றும் 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் ஆகியவற்றையும் மோடி அரசுதான் தற்போது நிறைவேற்றி உள்ளது”.

இவ்வாறு அவர் கூறினார்.   #PiyushGoyal #BJP #Congress
Tags:    

Similar News