செய்திகள்

புதிய இந்தியா உருவாக பாஜகவுக்கு வாக்களியுங்கள் - தெலுங்கானாவில் மோடி பிரசாரம்

Published On 2019-03-29 18:52 IST   |   Update On 2019-03-29 18:52:00 IST
நாட்டை விழிப்புடன் காவல் காக்கும் நபர் பிரதமராக இருப்பதால் மக்கள் அச்சமின்றி நடமாடுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, புதிய இந்தியா உருவாக பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். #Votefor #NewBharat #ModiinTelangana
ஐதராபாத்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகரில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி ஆதரவு திரட்டினார்.

ஜாதகம், ஜோசியத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் என்று தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவை குற்றம்சாட்டிய மோடி, வாரிசு அரசியல் மற்றும் சமரச அரசியல் மூலம் அவர் பிழைப்பு நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள உங்களது முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தெலுங்கானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னதாகவே சட்டசபையை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்தும் நிலையை உருவாக்கி விட்டார். ஜோசியரின் ஆலோசனையை கேட்டு அவர் செய்த இந்த காரியத்தால் தற்போது இங்கு இரண்டு தேர்தல்கள் நடைபெறுகிறது. 


இந்த மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற அவர் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்திருக்க முடியும். ஆனால், பதவியின் மூலம் தனது குடும்பத்தாருக்கு மட்டும் நன்மைகளை செய்த அவர் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. 

என்னை திட்டியும், தாக்கியும் பேசி வருபவர்களின் ஏச்சுகளுக்கு இடையில் மக்களின் ஆசிகளுடன் முன்னேற்றத்துக்கு தேவையான பல்வேறு நல்ல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி முடித்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தேவையான பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். 

ஏப்ரல் 11-ம் தேதி இங்கு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் தொகுதியின் எம்.பி.க்காகவோ, மத்தியில் அடுத்து ஆட்சி செய்யப்போகும் பிரதமருக்காகவோ நீங்கள் வாக்களிக்கப் போவதில்லை. புதிய பாரதம் உருவாவதற்காக வாக்களிக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் இந்த தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். #Votefor #NewBharat #ModiinTelangana
Tags:    

Similar News