செய்திகள்

பனித்திரையை அத்வானி தான் விலக்க வேண்டும் - உமா பாரதி கருத்து

Published On 2019-03-24 13:18 GMT   |   Update On 2019-03-24 13:18 GMT
பாராளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் தொகுதி அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பாக அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என உமா பாரதி தெரிவித்துள்ளார். #Advanitoclear #UmaBharti #clearthemist
புதுடெல்லி:

இந்திய அரசியலில் மிகவும் முதிர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி(91).  குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற இவருக்கு இந்த தேர்தலில் அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. 

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இந்த தேர்தலில் காந்தி நகர் தொகுதியில்  போட்டியிடுகிறார். இதன் மூலம் பாஜகவில் அத்வானியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது. 

பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் உழைப்பின் பலனை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தற்போது அனுபவித்து வருவதாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவும் குற்றம்சாட்டியுள்ளது. 

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய மந்திரியும், பாஜக துணைத்தலைவருமான உமா பாரதி அமித் ஷாவுக்கு காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அத்வானி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

‘நரேந்திர மோடி இன்று பிரதமர் பதவியில் இருக்கும் அளவுக்கு பாஜகவை பலமான கட்சியாக உருவாக்கியதில் ஆரம்பகாலத்தில் இருந்தே முக்கிய சக்தியாக திகழ்ந்தவர் அத்வானி. ஆனால், தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்விதமான பெரிய பதவியையும் எதிர்பார்த்ததில்லை.

தேர்தலில் போட்டியிடுவதாலோ, போட்டியிடாமல் போவதாலோ அவரது தகுதியில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு விடப்போவதில்லை. 

இந்த தேர்தலில் அவர் ஏன் போட்டியிடவில்லை? என்னும் கேள்விக்கு நானோ மற்றவர்களோ விளக்கம் அளிப்பது முறையாக இருக்காது. இவ்விவகாரத்தில் தன்னை சுற்றியுள்ள பனித்திரையை விலக்கும் வகையில் அத்வானியே விளக்கம் அளிப்பது தான் சரியாக இருக்கும்’ என உமா பாரதி குறிப்பிட்டார். #Advanitoclear #UmaBharti #clearthemist  
Tags:    

Similar News