செய்திகள்

நியூட்ரினோ வழக்கு- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-03-11 10:08 GMT   |   Update On 2019-03-11 10:08 GMT
நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NeutrinoProject #SupremeCourt
புதுடெல்லி:

தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நிறுவனத்திற்கு நியூட்ரினோ மைய ஆய்வக பணிகளை தொடர டாடா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த தீர்ப்பாயம், “நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும், அதுவரை ஆய்வு மைய பணிகளை தொடங்கக்கூடாது” என இடைக்கால தடை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவிற்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

‘நியூட்ரினோ ஆய்வு மையம் விவகாரத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்படும் வரை தான் திட்ட நடைமுறைகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை டாடா நிறுவனத்தின் சார்பில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதலை பெற்றுவிட்டால், திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். அதனால் இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவை ரத்து செய்து, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என மனுதாரர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #NeutrinoProject #SupremeCourt
Tags:    

Similar News