செய்திகள்

மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார்? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

Published On 2019-03-09 23:15 GMT   |   Update On 2019-03-09 23:15 GMT
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi #PMModi #MasoodAzhar
ஹவேரி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கோவா மாநிலம் பனாஜியில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். மீனவர் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்ட அவர், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வள துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பின்னர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் ஹவேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி சில பெரிய கம்பெனிகளின் நலனுக்காகவே பணியாற்றியுள்ளார். இந்த சமுதாயத்துக்கோ, சிறிய, நடுத்தர வர்த்தகர்களுக்கோ ஒன்றும் செய்யவில்லை. ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி அம்பானிக்கு வழங்கப்பட்டதுடன், பிரான்ஸ் அதிபரையும் இந்த நிறுவனத்தை அரசு நிறுவனத்துக்கு வழங்காமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும்படி நிர்ப்பந்தித்துள்ளார்.



காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். பயனாளிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும். இந்த திட்டத்துக்காக ஒரு சட்டம் கொண்டுவரப்படும். பிரதமர் மோடி பணத்தை எடுத்து பெரிய நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் போடும்போது, நாம் ஏன் கோடிக்கணக்கான வேலை இல்லாத இளைஞர்களுக்கு அதனை செய்யமுடியாது.

நமது இந்த திட்டத்தை கேட்டதும் பயந்துபோன பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு ஒரு குறைந்த தொகையை வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை அறிவித்தார். பிரதமரின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மூலம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெரிதும் பாதிக்கப்பட்டான். அதை நாம் திரும்பப்பெற முடியாது.

ஆனால், ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே வரியாக மிகவும் எளிமையான ஜி.எஸ்.டி. கொண்டுவரப்படும். என்னுடைய முதல் உரிமை பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவருவது தான்.

புல்வாமா தாக்குதலுக்காக பிரதமர் மோடி மசூத் அசாரை குற்றம்சாட்டினார். 1999-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் தான் மசூத் அசார் இந்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ராணுவ விமானத்தில் ஆப்கானிஸ்தானின் காந்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதைப்பற்றி பிரதமர் மோடி ஏன் பேசுவதில்லை?

40 மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான நபரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது பா.ஜனதா தான் என்பதை ஏன் நீங்கள் பேசுவதில்லை? நாங்கள் உங்களைப்போல (மோடி) இல்லை. நாங்கள் பயங்கரவாதத்துக்கு தலைவணங்கவில்லை. மசூத் அசாரை யார் விடுவித்தது என்பதை இந்திய மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். 
Tags:    

Similar News