செய்திகள்

ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு - பாகிஸ்தானில் நடத்திய தாக்குதல் பற்றி விளக்கம்

Published On 2019-02-26 20:34 GMT   |   Update On 2019-02-26 20:34 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதல் குறித்த தகவல்களை தெரிவித்தார். #PulwamaAttak #PMModi #IAFAttack #LoC
புதுடெல்லி:

இந்தியாவில் தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி வந்த பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்கு பறந்து சென்று அந்த முகாம்கள் மீது குண்டு வீசி அழித்தன. 350-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 10.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது வேறு யாரும் உடனிருக்கவில்லை.

பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தி, அங்குள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது பற்றியும், அதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரிடமும் விமானப்படையின் அதிரடி தாக்குதல்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அத்துடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேரில் சந்தித்து பேசினார். அவர் பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி வந்துள்ளது பற்றி விரிவாக விளக்கினார். 
Tags:    

Similar News