செய்திகள்

கார்பெட் தயாரிப்பு கூடத்தில் பயங்கர வெடிவிபத்து- 4 பேர் பலி

Published On 2019-02-23 10:05 GMT   |   Update On 2019-02-23 10:22 GMT
உத்தரபிரதேசத்தின் படோகி மாவட்டத்தில் வீட்டில் செயல்பட்டு வந்த கார்பெட் தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். #UPExplosion
படோகி:

உத்தரபிரதேச மாநிலம் படோகி-வாரணாசி சாலையில் உள்ள ரோதாகன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கார்பெட் தயாரிப்பு தொழிற்கூடம் செயல்பட்டு வருகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் பட்டாசு விற்பனையும் செய்து வருகிறார். இன்று மதியம் வழக்கம்போல் கார்பெட் தொழிற்கூடத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென வெடிகுண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது. சக்தி வாய்ந்த பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த பண்டல் மொத்தமாக வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் சிறிது நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள், கார்பெட் தொழிற்கூடத்தில் வேலை செய்தவர்கள் என பலர் இடிபாடுகளில்  சிக்கிக்கொண்டனர். நெடுஞ்சாலையில் கட்டிட சிதறல்களும், மனித உடல் பாகங்களும் சிதறிக் கிடந்தன.  இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும்  மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.



இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #UPExplosion
Tags:    

Similar News