செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

Published On 2019-02-15 21:03 GMT   |   Update On 2019-02-15 21:03 GMT
சுப்ரீம் கோர்ட்டில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #SupremeCourt
புதுடெல்லி:

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் கஜா புயல் நிவாரண பணிகளை காரணம்காட்டி அத்தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீராக தொடங்கிவிட்டது.

அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலும் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம்காட்டி நிறுத்தப்பட்டது. எனவே, இந்த இரு தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் கே.கே.ரமேஷ் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜராகி வாதாடினார்.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தல் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் ஐகோர்ட்டு தேர்தல் நடத்துவது குறித்து தடை ஏதும் விதிக்கவில்லை என்றால் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். #SupremeCourt
Tags:    

Similar News