செய்திகள்

பா.ஜனதா தனித்து போட்டியிட தயார்: தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு பேச்சு

Published On 2019-02-10 02:41 GMT   |   Update On 2019-02-10 02:41 GMT
மராட்டியத்தில் 48 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட தயாராகி விட்டது என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பாக பேசியுள்ளார். #DevendraFadnavis #BJP
மும்பை:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புனே, பாராமதி மற்றும் ஷிரூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புனேயில் நடைபெற்றது.

இதில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். மேலும் கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

மராட்டியத்தில் நமது கூட்டணி 45 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கீழ் வெற்றிபெற்றால், அது வெற்றியாகவே கருதப்படாது.

நமது கட்சி உறுப்பினர்கள் மராட்டியத்தில் 45 தொகுதிகளை எனக்காக வென்று தரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு முதலில் நீங்கள் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பலம் பெற்று விளங்கும் பாராமதி தொகுதியை கைப்பற்றவேண்டும். அப்படி செய்தால் 45 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்று விடலாம்.

ஊழல் புரிந்தவர்களின் கைகளுக்கு மராட்டியத்தில் ஒரு தொகுதி கூட சென்றுவிடக்கூடாது,

இவ்வாறு அவர் பேசினார்.

புனேயில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.


தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளிலும் முழு பலத்துடன் பா.ஜனதா மோத உள்ளது. அந்த அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகி விட்டோம். மராட்டியத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை பாராமதியையும் சேர்த்து 43 இடங்களை பா.ஜனதா கைப்பற்றும். கடைசி தேர்தலில் பாராமதியில் பா.ஜனதா சார்பாக போட்டியிட்ட ராஷ்டிரீய சமாஜ் கட்சி வேட்பாளர் குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார்.

அவர் தாமரை சின்னத்தின் கீழ் களம் இறங்கியிருந்தால் நிச்சயம் பா.ஜனதா அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும். இந்த முறை அந்த தவறு நிச்சயம் நடக்காது.

மாநிலத்தில் ஏழைகளுக்காகவும், விவசாயிகளின் பிரச்சினையை போக்குவதற்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

மாநிலத்தின் முழு வளர்ச்சிக்காகவும், தங்களின் வாழ்க்கைகாவும் மக்கள் வரலாற்று பிழையை நிகழ்த்த மாட்டார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராமதி தொகுதி தற்போது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. #DevendraFadnavis #BJP 
Tags:    

Similar News