செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி - மாநிலங்களவை நான்காவது நாளாக ஒத்திவைப்பு

Published On 2019-02-07 10:49 GMT   |   Update On 2019-02-07 10:49 GMT
கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நான்காவது நாளாக மாநிலங்களவை இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களாக  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.  

இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.



2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கோஷங்கள் எழுப்பினர்.

உறுப்பினர்களை அமைதி காக்கும்படி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை நான்காவது நாளாக இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
Tags:    

Similar News