செய்திகள்

ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை- குமாரசாமி பேட்டி

Published On 2019-01-26 05:44 GMT   |   Update On 2019-01-26 06:43 GMT
ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா சதி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

ஏற்கனவே 2 முறை ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததாகவும், தற்போது 3-வது முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் சித்தராமையா மற்றும் துணை முதல்மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க காங்கிரசார் நடவடிக்கை எடுத்தாலும் பாரதீய ஜனதா தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் போனில் பேசி அவர்களை இழுக்க முயற்சி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்க வில்லை என்று எடியூரப்பா கூறி இருக்கிறார். ஆபரேசன் தாமரை நடைபெறவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். ஆனால் உண்மையில் ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கடந்த வியாழக்கிழமை இரவு கூட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது பா.ஜனதாவுக்கு வரும்படி அந்த எம்.எல்.ஏ.வை அழைத்து இருக்கிறார்கள்.

அதற்காக மிகப்பெரிய பரிசை கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த மிகப்பெரிய பரிசு நீங்கள் நினைப்பது போல் மிகக்குறைவான பரிசு அல்ல. அது மிகப்பெரிய பரிசு.

அந்த மிகப்பெரிய பரிசு என்னவென்று நான் சொன்னால் அனைவரும் வியப்படைவீர்கள். மிகப்பெரிய பரிசு மட்டுமல்ல பணமும் கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் பா.ஜனதாவினர் பேரம் பேசி இருக்கின்றனர்.

ஆனால் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். தற்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னை தொடர்பு கொள்வதை விட்டுவிடும்படியும் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவிடம் கூறி இருக்கிறார். இந்த தகவலை அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வே என்னிடம் கூறினார்.

அந்த எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜனதா கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்ன என்பதை நான் கூறமாட்டேன். அதுகுறித்து அந்த எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.


கடந்த 2008-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுத்து முதல் மந்திரி பதவியை எடியூரப்பா தக்க வைத்துக்கொண்டார். அதுபோலத்தான் தற்போதும் எம்.எல்.ஏ.க் களை இழுக்கும் பணியை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதை நான் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

Tags:    

Similar News