செய்திகள்

வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

Published On 2019-01-22 12:10 GMT   |   Update On 2019-01-22 12:10 GMT
வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் குளறுபடி சர்ச்சையை அடுத்து 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். #Mayawati #ParliamentElection #BallotPapers
லக்னோ:

கடந்த 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டினார்.

மேலும், உ.பி., குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்தது. ராணுவ தேவைக்காக பயன்படுத்தப்படும் அலைவரிசையை பா.ஜ.க. பயன்படுத்தி, வாக்கு பதிவு இயந்திரங்களுக்குள் ஊடுருவி இந்த தில்லுமுல்லுவை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே, வாக்கு பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, தில்லுமுல்லு செய்ய ஏற்றவை, தேர்தல் முடிவுகளையே மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளவை என்று பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.



இதற்கிடையே, சையது சுஜாவின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம், இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜனநாயகத்தின் நலனை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும். பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் முடியாது என்றால் வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்தலாம். வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Mayawati #ParliamentElection #BallotPapers
Tags:    

Similar News