செய்திகள்

சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா தொடர சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2019-01-08 11:43 IST   |   Update On 2019-01-08 11:43:00 IST
மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா அந்தப் பதவியில் தொடர சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #CBIDirector #AlokVerma
புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இதைதொடர்ந்து, அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எடுத்த இந்த நடவடிக்கையால் அவரை கட்டாய விடுப்பில் வைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது.

சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்கி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு உத்தரவிட்டது

எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடத்திவரும் விசாரணை முடிவடையும்வரை அவர் கொள்கை அடிப்படையிலான எவ்விதமான முக்கிய முடிவும் எடுக்கக்கூடாது என கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

இவ்விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட தேர்வு குழுவின் முடிவுக்கு விட்டிருக்கலாம் எனவும் கோர்ட் சுட்டிக்காட்டியது.

இன்றைய தீர்ப்பு தொடர்பாக டெல்லி போலீசாருக்கான சிறப்பு சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் உயரதிகாரம் கொண்ட குழு இன்னும் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 31-ம் தேதியுடன் தனது இரண்டாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அலோக் வர்மா இந்த உத்தரவு மூலம் அதுவரை மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  #CBIDirector  #AlokVerma 
Tags:    

Similar News