இந்தியா

திருப்பதியில் இன்று முதல் 8-ந்தேதி வரை இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி: கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2026-01-02 07:35 IST   |   Update On 2026-01-02 07:35:00 IST
  • இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
  • சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அதில், குலுக்கல் முறையில் 1 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வான பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன. அதில், 30-ந்தேதி 57 ஆயிரம் பக்தர்களும், 31-ந்தேதி 64 ஆயிரம் பக்தர்களும், ஆங்கிலப் புத்தாண்டான நேற்று 55 ஆயிரம் பக்தர்களும் டோக்கன்கள் மூலம் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கான சொர்க்க வாசல் தரிசனம் முழுமையாக நிறைவடைந்தன.

இந்தநிலையில் இன்று முதல் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்துக்கான டோக்கன்கள் தேவையில்லை, டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் வருகிற 8-ந்தேதி வரை சாதாரணமாக இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

அதற்காக கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம், ஆர்ஜித சேவைகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்கள் ஆகியவை இன்று முதல் 8-ந்தேதி வரை நடக்காது, அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் (டைம் ஸ்லாட் டோக்கன்கள்) வழங்கும் கவுண்ட்டர்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்ட்டர்கள், வி.ஐ.பி. பிரேக் தரிசன டோக்கன் கவுண்ட்டர்கள் இந்த நாட்களில் மூடப்பட்டு இருக்கும். இதற்காக எந்தவிதமான பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது.

சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும். ஆண்கள் வேட்டி அல்லது பைஜாமா அணிய வேண்டும். பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிய வேண்டும். சாமி தரிசனத்துக்கு வரும் அனைத்துப் பக்தர்களும் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், தேவஸ்தான ஊழியர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அதேநேரத்தில் திருமலை, திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் உள்ளூர் பக்தர்களுக்காக 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இ.குலுக்கல் முறையின் மூலம் தினமும் 5 ஆயிரம் தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 4 ஆயிரத்து 500 டோக்கன்கள் திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 500 டோக்கன்கள் திருமலை பாலாஜிநகரில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் இன்று முதல் 8-ந்தேதி வரை இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Tags:    

Similar News