செய்திகள்

எம்ஜிஆர் கெட்டப்பில் பாராளுமன்றத்துக்கு வந்த ஆந்திரா எம்பி

Published On 2019-01-07 12:31 IST   |   Update On 2019-01-07 12:31:00 IST
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்து இன்று பாராளுமன்றத்துக்கு வந்த ஆந்திரா எம்.பி.யால் பரபரப்பு ஏற்பட்டது. #TDPMP #NaramalliSivaprasad #MGR
புதுடெல்லி:

ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், அ.தி.மு.க. மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவையை செயல்பட விடாமல் இடையூறு செய்ததாக அ.தி.மு.க.வை சேர்ந்த 31 உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தும் இவர்கள் 46 பேரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமீபத்தில் உத்தரவிட்டார்.


இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கண்ட பிரச்சனைகளை மையப்படுத்தி அமளியில் ஈடுபட்டனர். தனியாக இருந்த ஒரேயொரு அ.தி.மு.க. எம்.பி. மட்டும் சபாநாயகர் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினார்.

அவருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்தவாறு குரல் எழுப்பிய ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

நரமள்ளி சிவபிரசாத் என்ற அந்த உறுப்பினர் இதற்கு முன்னர் பெண் வேடமிட்டும், மந்திரவாதி, சலவை தொழிலாளி ஆகிய வேடங்களிலும் முன்னர் மக்களவைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அமளியும் கூச்சலும் நிலவியதால் 5 நிமிடம் மட்டுமே இருக்கையில் அமர்ந்திருந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு எழுந்துச் சென்று விட்டார். #TDPMP #NaramalliSivaprasad #MGR 
Tags:    

Similar News