செய்திகள்

கருப்பு பணமாக பதுக்குவதால் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிப்பது குறைப்பு

Published On 2019-01-04 05:01 GMT   |   Update On 2019-01-04 05:43 GMT
கருப்பு பணமாக பதுக்குவதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். #BlackMoney #RBI #Demonetisation
புதுடெல்லி:

2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதற்கு பதிலாக ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த நோட்டுகள் கணிசமாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.2000 நோட்டுகளை கருப்பு பணமாக பதுக்குவது அதிகரித்து வருகிறது.

எனவே அதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை அச்சடிப்பதை மிகவும் குறைப்பது என மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதனால் மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் வரையிலான புள்ளி விவரப்படி 18 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் 6.37 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுகளாகும். இது மொத்த பணத்தில் 37 சதவீதம் ஆகும்.

அதேபோல 500 ரூபாய் நோட்டுகள் ரூ.7.33 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளன. இது மொத்த பணத்தில் 43 சதவீதம் ஆகும்.

2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு நிறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். #BlackMoney #RBI #Demonetisation
Tags:    

Similar News