செய்திகள்

கேரளாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் - பினராயி விஜயனுக்கு ஆளுநர் சதாசிவம் அறிவுறுத்தல்

Published On 2019-01-03 14:01 GMT   |   Update On 2019-01-03 14:01 GMT
கேரளாவில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் சதாசிவம், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். #Sabarimalai #KeralaShutdown #Sathasivam #PinarayiVijayan
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. 
 
உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை. 

இதற்கிடையே, நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இதுதொடர்பாக, கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தால் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. சுமார் 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.



கேரளாவில் வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 300க்கு மேற்பட்டவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனிடம் சட்டம், ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே, அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். #Sabarimalai #KeralaShutdown #Sathasivam #PinarayiVijayan
Tags:    

Similar News