செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- பாதுகாப்பு படை அதிரடி

Published On 2018-12-13 11:27 GMT   |   Update On 2018-12-13 11:27 GMT
ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #SoporeEncounter
பாரமுல்லா:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் அருகே உள்ள பிராத் கலன் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினரும் போலீசாரும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். அதிகாலை வரை நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், லஷ்கர் இ  தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஓவிஸ் பட், தாகிர் அகமது என்பது தெரியவந்தது.

இந்த என்கவுண்டர் குறித்து வடக்கு காஷ்மீர் டிஐஜி அதுல் குமார் கோயல் கூறுகையில், “உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சரண் அடைவதற்கு வாய்ப்பு வழங்கியதையும் மீறி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவே, நாங்கள் பதிலடி கொடுத்தோம். இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்றார். #SoporeEncounter

Tags:    

Similar News