செய்திகள்

தெலுங்கானா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் தேர்வு

Published On 2018-12-12 10:02 GMT   |   Update On 2018-12-12 10:02 GMT
தெலுங்கானா மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao
ஐதராபாத்:

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.



காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர  ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம் எல் ஏக்களின் கூட்டம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் தெலுங்கானா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சந்திரசேகர ராவ் தனது ஆதரவாளர்களுடன் தெலுங்கானா மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என தெரிகிறது. #TelanganaElections #ChandrashekharRao
Tags:    

Similar News