செய்திகள்

தேர்தல் முடிவுகள் எதிரொலி- பங்குச் சந்தைகள் இன்றும் வீழ்ச்சி

Published On 2018-12-11 06:01 GMT   |   Update On 2018-12-11 06:01 GMT
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக இல்லாததால், இதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. #Sensex #5StateElection #ElectionResults2018
மும்பை:

5 மாநிலங்களில் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜனதாவுக்கு எதிராகவும், காங்கிரசுக்கு சாதகமாகவும் முடிவுகள் அமைந்துள்ளன. இது பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. ஏற்கனவே கருத்துகணிப்புகளில் முடிவுகள் பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லாததைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று 714 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. இது கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவாகும்.

நேற்று 35,673 புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மந்தமாகவே சென்று இறுதியில் 34,959 புள்ளிகளில் இருந்தது.

இதன்மூலம் மும்பை சென்செக்ஸ் நேற்று 714 புள்ளிகள் (2 சதவீதம்) சரிந்தது. இது கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதிக்கு பிறகு அதிகபட்ச வீழ்ச்சி ஆகும்.

தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் இன்றும் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா காரணமாக ரூபாய் மதிப்பும் சரிந்தது. தற்போது 1 டாலருக்கு நிகராக 71.56 ரூபாயாக உள்ளது.


அதேபோல் மும்பை பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கி உள்ளது. தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதனால் மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின் துவக்கத்தில் 200 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது. அதன்பின்னர் 500 புள்ளிகள் வரை சரிந்து, பின்னர் வர்த்தகம் ஏற்றம் பெற்றது. 11 மணியளவில் 47 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் ஆனது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் இறங்குமுகத்தில் தொடங்கிய வர்த்தகம் பின்னர் படிப்படியாக எழுச்சியடைந்தது. 11 மணி நிலவரப்படி நிப்டி 17 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது.

தேர்தல் முடிவுகள் மிகவும் நெருக்கமாக, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் வந்தாலோ, அல்லது பாஜக தோல்வி அடைந்தாலோ பங்கு சந்தை இன்னும் பெரிய பாதிப்பை சந்திக்கும். இதனால் தற்போது பங்குச்சந்தை நிபுணர்கள் மிகுந்த கவனத்துடன் அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறார்கள். #Sensex #5StateElection #ElectionResults2018 
Tags:    

Similar News