செய்திகள்

படைவீரர் கொடிநாள் நிதி - பிரதமருக்கு கொடி அணிவித்து வசூல் தொடங்கியது

Published On 2018-12-07 10:04 GMT   |   Update On 2018-12-07 10:04 GMT
படைவீரர் கொடிநாள் நிதி திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர் இன்று கொடி அணிவித்து இந்த ஆண்டுக்கான வசூலை தொடங்கி வைத்தார். #BrigadierMHRizvi #NarendraModi #ArmedForcesFlagDay
புதுடெல்லி:

நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், அண்டை நாட்டு எதிரிகள் மற்றும் உள்நாட்டு தீவிரவாதிகளின் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.


ஒவ்வொரு மாநில நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக உள்ள அரசு அலுவலகங்களின் மூலம் கொடி நாள் நிதி திரட்டப்படுகின்றது. இந்த நிதி வசூலை அந்தந்த மாநிலங்களின் கவர்னர்கள் ஆண்டுதோறும் துவக்கி வைப்பார்கள். பின்னர், மாவட்டங்கள் தோறும் திரட்டப்படும் நிதியானது, மாநில அரசிடம் சேர்ப்பிக்கப்படும்.

மாநில அரசுகள் அனைத்தும் அந்தந்த ஆண்டுகளில் தாம் சேமித்த நிதியை பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய அளவிலான படை வீரர்கள் நலவாரியத்திடம் ஒப்படைக்கும்.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் நிதி திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர் பிரிகேடியர் எம்.ஹெச். ரிஸ்வி இன்று கொடி அணிவித்து இன்று வசூலை தொடங்கி வைத்தார். #BrigadierMHRizvi #NarendraModi #ArmedForcesFlagDay 
Tags:    

Similar News