செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2018-12-07 08:10 GMT   |   Update On 2018-12-07 08:10 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெடித்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. #SC #CBI #Sterlitefiring
புதுடெல்லி:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கலவரம் தொடர்பாக முதலில் சிப்காட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி போலீசார் 5 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தினர். இதனிடையே தூத்துக்குடி கலவர வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.



இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்பு சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது.

சென்னை சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு ரவி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தார். சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், சந்தேக மரணங்கள் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதுதொடர்பாக 20 அமைப்புகள் மீது வழக்கு பதியப்பட்டது.

மேலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அளித்த புகாரின் பேரில் தமிழக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிந்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி கதிரேசன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ நடத்திவரும் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். எனினும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க மனுதாரருக்கு 4 வார கால அவகாசம் அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SC #CBI #Sterlitefiring

Tags:    

Similar News