செய்திகள்

கேரள மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.3048 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு

Published On 2018-12-07 05:27 GMT   |   Update On 2018-12-07 05:27 GMT
488 பேரை பலி வாங்கிய கேரள வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.3,048 கோடியை ஒதுக்கி உள்ளது. #KeralaRain #KeralaFlood
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்தது. பாதுகாப்பு கருதி ஒரே நேரத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளையும் திறக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடானதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் இடம் பெயர்ந்தனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு கேரளாவையே புரட்டிப்போட்ட இந்த மழை வெள்ளத்தால் 488 பேர் உயிர் இழந்தனர். பல ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. விவசாய நிலங்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தது. கேரளாவில் ஏற்பட்ட இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிலங்களில் இருந்தும் உதவிகள் கேரளாவுக்கு சென்றது.

மத்திய குழுவும் கேரளாவுக்குச் சென்று அங்கு ஏற்பட்ட வெள்ள சேதத்தை ஆய்வு செய்தது. முதல் கட்டமாக கேரளாவுக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் கேரளாச் சென்று வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டார்.



இதைத் தொடர்ந்து கேரளாவுக்கு ரூ. 500 கோடி நிவாரண நிதி வழங்க பிரதமர் உத்தரவிட்டார். அப்போது இந்த நிவாரண உதவிகள் முன்பணம் தான் என்றும் கேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கேரள அரசும் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.4 ஆயிரத்து 800 கோடி வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. இதை ஏற்று கேரள வெள்ளப்பாதிப்புக்கு கூடுதல் நிதியாக ரூ. 3,048.39 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.



மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. #KeralaRain #KeralaFlood
Tags:    

Similar News