செய்திகள்

காஷ்மீரில் குதிரை பேரத்தை தடுக்கவே சட்டசபை கலைப்பு- கவர்னர் விளக்கம்

Published On 2018-11-22 10:49 GMT   |   Update On 2018-11-23 03:50 GMT
காஷ்மீரில் குதிரை பேரத்தை தடுப்பதற்காகவே சட்டசபை கலைக்கப்பட்டது என்று கவர்னர் சத்யபால் மாலிக் விளக்கம் அளித்துள்ளார். #JKAssembly #JKAssemblyDissolved #SatyaPalMalik
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ஆட்சியில் இருந்த மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜனதா வாபஸ் பெற்றது. இதனால் பி.டி.பி. கூட்டணி அரசு கவிழ்ந்தது.

இதை தொடர்ந்து காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபையை கவர்னர் முடக்கி வைத்து இருந்தார்.

இதற்கிடையே மக்கள் மாநாட்டு கட்சி தலைமையில் புதிய ஆட்சியை அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டது. அதை முறியடிக்கும் வகையில் பி.டி.பி., காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

ஆட்சி அமைக்க பி.டி. பி.யும், மக்கள் மாநாட்டு கட்சியும் உரிமை கோரி இருந்த நிலையில் கவர்னர் சத்யபால் மாலிக் காஷ்மீர் சட்டசபையை திடீரென கலைத்தார். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பி.டி.பி. தலைவர் மெகபூபா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர்அப்துல்லா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காஷ்மீர் சட்டசபையை கலைத்தது ஏன்? என்பதற்கு அம்மாநில கவர்னர் மாளிகை விளக்கம் அளித்தது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குதிரை பேரத்தை தடுப்பதற்காகவே சட்டசபை கலைக்கப்பட்டது. அரசியல் கருத்தில் முரண்பாடு கொண்ட கட்சிகளால் நிலையான ஆட்சியை அமைக்க இயலாது. சாத்தியமற்ற சூழ்நிலை நிலவுவதால் சட்டசபை கலைக்கப்பட்டது.

சட்டசபை கலைக்கப்பட்டதால் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலோடு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில் காஷ்மீர் சட்டசபைக்கு முன்னதாக தேர்தல் நடத்துவதே சிறந்த வழி என்று பா.ஜனதா தெரிவித்து உள்ளது. #JKAssembly #JKAssemblyDissolved  #SatyaPalMalik
Tags:    

Similar News