செய்திகள்

பாஜக ஆட்சி தொடர அனுமதித்தால் வரலாறு நம்மை மன்னிக்காது- மன்மோகன்சிங் விமர்சனம்

Published On 2018-11-22 04:46 GMT   |   Update On 2018-11-22 04:46 GMT
பா.ஜ.க. அரசை நாம் மீண்டும் தொடர அனுமதித்தால் வரலாறு நம்மை மன்னிக்காது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #Congress #ManmohanSingh #MPAssemblyElection #Modi
இந்தூர்:

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது இந்தூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நமது நாட்டின் பாராளுமன்றம், சி.பி.ஐ. போன்றவை நம்பிக்கைக்குரிய அமைப்புகளாக உள்ளன. ஆனால் அவற்றை திட்டமிட்டு இழிவுபடுத்தும் செயல்கள் நடந்து வருகின்றன.

ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. போன்றவற்றை மோடி அரசு பணிய வைக்க பார்க்கிறது. இது இந்திய ஜனநாயகத்தை சீர்குலைத்துவிடும். நாடு சட்டத்தின் மூலம் ஆளப்படுகிறது. அதையும் நாசமாக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இந்த செயல்களை செய்யும் பா.ஜ.க. அரசை நாம் மீண்டும் தொடர அனுமதித்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. ஒவ்வொரு வி‌ஷயத்திலும் திட்டமிட்டு ஜனநாயகத்தை பலவீனமாக்க பார்க்கிறார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி எதிர்க்கட்சியினரை பயன்படுத்தக்கூடாத கடுமையான வார்த்தைகளை கூறி விமர்சிக்கிறார். இது தவறான போக்கு. ரிசர்வ் வங்கிக்கும், நிதித்துறைக்கும் இடையே மோதல்போக்கு நடந்து வருகிறது.

இரு அமைப்புகளும் ஒன்றாக இணைந்து முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் செயல்பாடுகள் முடங்குகிறது. இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் நாட்டை முன்னேற்ற முடியும்.

பணமதிப்பிழப்பு திட்டம், ஜி.எஸ்.டி. அமலாக்கம் போன்றவை மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அமைப்பு சாரா தொழில்களை நாசமாக்கி விட்டது. மக்களை கடுமையான பாதிப்புக்கு ஆளாக்கிய இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார். #Congress #ManmohanSingh #MPAssemblyElection #Modi
Tags:    

Similar News