செய்திகள்

கொச்சியை நோக்கி கஜா புயல்- கேரளாவில் இன்று கனமழை பெய்யும்

Published On 2018-11-16 04:34 GMT   |   Update On 2018-11-16 04:34 GMT
கஜா புயல் திருச்சி, மதுரை, தேனி மாவட்டம் வழியாக மூணாறை கடந்து கொச்சி அரபி கடலில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கும் என்பதால் கேரளாவில் இன்று பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gaja #KeralaRain
திருவனந்தபுரம்:

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை- வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதமும் ஏற்பட்டது.

கஜா புயல் திருச்சி, மதுரை, தேனி மாவட்டம் வழியாக மூணாறை கடந்து கேரள மாநிலம் கொச்சி அரபி கடலில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இன்று பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.


கஜா புயல் எதிரொலியாக கேரள மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 8 மணி அளவில் அடைமழையாக மாறி கொட்டித்தீர்த்து வருகிறது. மழையின் போது பலத்த காற்றும் வீசுகிறது. கடலில் ராட்சத அலைகளும் எழுந்து கரையை நோக்கி சீறிப்பாய்கிறது.

கேரள மாநிலம் கோட்டயம், எர்ணாகுளம், திருவல்லா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரளாவில் கனமழை பெய்ததால் அந்த மாநிலம் முழுவதும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது. மழை காரணமாக கேரளாவே வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்தது. அந்த மழை பாதிப்பில் இருந்து கேரள மாநிலம் இன்னும் முழுமையாக மீள முடியவில்லை. இந்த நிலையில் கஜா புயல் கேரளாவை மிரட்ட தொடங்கி உள்ளது. #GajaCyclone #Gaja #KeralaRain
Tags:    

Similar News