செய்திகள்

திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்ய வேண்டும்: எடியூரப்பா

Published On 2018-11-07 02:37 GMT   |   Update On 2018-11-07 02:37 GMT
திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். #TipuJayanthi #Yeddyurappa
பெங்களூரு :

கர்நாடக அரசு சார்பில் வருகிற 10-ந் தேதி திப்பு ஜெயந்தி விழா நடக்கிறது. இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திப்பு சுல்தான் பல்வேறு விஷயங்களில் பிரச்சினைக்குரிய நபராக இருக்கிறார். மேலும் அவர் மதவெறி கொண்டவர். வரலாற்று ஆவணங்கள்படி, கொடவா சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தவர். கொடவா சமூக மக்கள் சமீபத்தில் டெல்லியில் இங்கிலாந்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மலைவாழ் மக்களுக்கு எதிராக போரிட்டபோது, திப்பு சுல்தானுக்கு இங்கிலாந்து ஆதரவு வழங்கியது. இதற்காக மன்னிப்பு கேட்குமாறு கொடவா மக்கள் வலியுறுத்தினர்.



திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறி இருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். திப்பு ஜெயந்தி விழாவை நடத்துவது, மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. அதனால் இந்த விழாவை நாங்கள் எதிர்க்கிறோம்.

சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழாவை மாநில அரசு நடத்துகிறது. இது வாக்கு வங்கி அரசியல். முஸ்லிம் சமுதாயத்தில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க வேண்டும் என்று விரும்பினால், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அப்துல் ஹமித் ஆகியோர் இருக்கிறார்கள். அதனால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திப்பு ஜெயந்தி விழாவை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TipuJayanthi #Yeddyurappa 
Tags:    

Similar News