செய்திகள்

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: 80 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் டிக்கெட் இல்லை

Published On 2018-10-20 07:24 GMT   |   Update On 2018-10-20 07:24 GMT
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் 80 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட அனுமதி அளிப்பது இல்லை என்று பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #BJP #MadhyaPradeshelection

போபால்:

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற நவம்பர் 28-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப்பிர தேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது.அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.

மறுபுறம் காங்கிரசும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலையை காங்கிரஸ் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் பிரசார வியூகம் அமைத்து செயல்படுகிறது.

தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 80 பேருக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது.


எம்.எல்.ஏ.க்கள் பற்றி பா.ஜனதா ரகசிய கருத்து கணிப்பு நடத்தியது. இதே போல் பிரதமர் மோடியின் ‘நமோ ஆப்’ செயலிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பற்றி ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் புகாருக்கு ஆளாக எம்.எல்.ஏ.க்களுக்கும், மக்கள் மத்தியில் அதிருப்திக்கு ஆளான எம்.எல்.ஏ.க்களுக் கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிப்பது இல்லை என்று பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது.

அதன்படி மொத்தம் 80 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதே போல சில அமைச்சர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பந்தப்பட்ட எம்.எல். ஏ.க்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவுவதால் அவர்களை மீண்டும் வேட்பாளர்களாக களம் இறக்கினால் தேர்தல் வெற்றி பாதிக்கப்படும் என்றும் அதன் காரணமாகவே இந்த முடிவுக்கு பா.ஜனதா வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இம்முறை புதுமுகங்களை வேட்பாளர்களாக களம் இறக்கலாம் என முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #BJP #MadhyaPradeshelection

Tags:    

Similar News