செய்திகள்

சபரிமலை நோக்கி சென்ற பெண்களை தடுத்து நிறுத்திய போராட்டக் குழுக்கள்- அடிவார முகாமில் பரபரப்பு

Published On 2018-10-16 10:36 GMT   |   Update On 2018-10-16 10:36 GMT
சபரிமலை நோக்கி சென்ற பெண்களை நிலக்கல் அடிவார முகாமில் போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #SabarimalaVerdict #SabarimalaProtests #Kerala
நிலக்கல்:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. பெண்களும் அதிக அளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாளை (17-ந்தேதி) சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ளது. அப்போது பெண்கள் கோவிலுக்கு வரத் தொடங்குவார்கள் என்பதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவோம் என்றும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதால், போராட்டக்காரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக புறப்பட்டு வந்த பெண்கள் சிலர் இன்று நிலக்கல் அடிவார முகாமை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து பம்பை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்த போராட்டக்காரர்கள், பெண்களை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். அவர்களுடன் வந்த பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மேலும், கோவிலுக்கு செல்லும் மலையேற்ற வழிப்பாதையில் செல்லும் கார்களையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி, பெண்கள்  யாராவது கோவிலுக்கு செல்கிறார்களா? என கண்காணிக்கத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவில் நடை திறந்த பிறகு, பெண்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால், அடிவார முகாமிற்கு சுமார் 30 அமைப்புகள் சார்பில் கூடுதலாக போராட்டக் குழுக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர். எனவே, வரும் நாட்களில் போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர முயற்சி எடுக்க வாய்ப்பு உள்ளது. #SabarimalaVerdict #SabarimalaProtests #Kerala
Tags:    

Similar News