செய்திகள்

துர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்கு வங்காளம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Published On 2018-10-12 09:48 GMT   |   Update On 2018-10-12 09:48 GMT
துர்கா பூஜைக்கு அரசுப் பணம் 28 கோடி ரூபாயை அளிக்கும் மேற்கு வங்காளம் மாநில அரசின் முடிவு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SC #WBgovernment #DurgaPujaCommittees
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையை  மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்தது.

இந்த சலுகை அறிவிப்பின் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மம்தா பானர்ஜியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மம்தா பானர்ஜி அறிவிப்பு விவகாரத்தில் தலையீடு செய்ய இயலாது. உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்ததுடன் நேற்று முன்தினம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் சவுரவ் தத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் கோரிக்கையின்படி, துர்கா பூஜை குழுக்களுக்கு பணம் அளிக்க தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை நிராகரித்துவிட்ட நீதிபதிகள் இவ்விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்காளம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.  #SC  #WBgovernment #DurgaPujaCommittees
Tags:    

Similar News