செய்திகள்

காஷ்மீரில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்: பயங்கரவாதிகள் நிறைந்த பகுதியில் வெறும் 8.3 சதவீத ஓட்டுப்பதிவு

Published On 2018-10-08 21:38 GMT   |   Update On 2018-10-08 21:38 GMT
காஷ்மீரில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்தது. அதில், பயங்கரவாதிகள் நடமாட்டம் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியில் வெறும் 8.3 சதவீத ஓட்டுகளே பதிவாகின. #JammuKashmirElection
ஸ்ரீநகர்:

காஷ்மீரில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், முக்கிய கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. அரசியல் சட்டத்தின் 35ஏ பிரிவை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, இந்த முடிவை எடுத்தன.

அதே சமயத்தில், தேர்தலில் பங்கேற்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 2 பேர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனால், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை தவிர்த்தனர். வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் பல்வேறு வார்டுகளில் ஒரு வேட்பாளர் கூட மனுதாக்கல் செய்யவில்லை.

இந்த சூழ்நிலையில், பலத்த பாதுகாப்புடன், நேற்று முதல்கட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பயங்கரவாதிகள் நடமாட்டம் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

அங்கு மொத்தம் 152 வார்டுகள் உள்ளன. அவற்றில் 69 வார்டுகளில் போட்டியின்றி ஏற்கனவே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். எனவே, மீதி உள்ள 83 வார்டுகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 84 ஆயிரத்து 692 வாக்காளர்களில் வெறும் 7 ஆயிரத்து 57 பேர் மட்டுமே வாக்களித்தனர். இது, வெறும் 8.3 சதவீதம் ஆகும்.

பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த ஸ்ரீநகர் மாநகராட்சியில் 30 ஆயிரத்து 74 வாக்காளர்கள் இருந்தும், ஆயிரத்து 862 பேர் மட்டுமே வாக்களித்தனர். பட்கம் மாவட்டத்தில் 17 சதவீதமும், அனந்தநாக் மாவட்டத்தில் 7.3 சதவீதமும், பாரமுல்லா மாவட்டத்தில் 5.7 சதவீதமும், பந்திப்போரா மாவட்டத்தில் 3.3 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இருப்பினும், குளிர் பிரதேசங்களான கார்கில், லே ஆகியவற்றில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. கார்கிலில் 78 சதவீத வாக்குகளும், லேவில் 52 சதவீத வாக்குகளும் பதிவாகின.

பந்திப்போரா மாவட்டத்தில் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. அதில், பா.ஜனதா வேட்பாளர் காயம் அடைந்தார். அதைத்தவிர, ஓட்டுப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #JammuKashmirElection
Tags:    

Similar News