செய்திகள்

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது - கேரள முதல்வர் பினராயி விஜயன்

Published On 2018-10-03 13:50 IST   |   Update On 2018-10-03 13:50:00 IST
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #PinarayiVijayan #Sabarimalaverdict
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் சபரிமலையில் அய்யப்பன் கோவில் உள்ளது. அய்யப்பன் நித்திய பிரம்மசாரி என்பதால் இவரை 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கினர்.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் பரவலாக தீர்ப்புக்கு ஆதரவுக்குரல்களும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்வது குறித்து கேரள அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட மாட்டது, இனி சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுக்கவும் முடியாது என அவர் தெரிவித்தார்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்று திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 17-ந்தேதி ஐப்பசி மாத பிறப்பின் போது நடை திறக்கப்படும். மறுநாள் 18-ந்தேதி காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி வருகிற 18-ந்தேதி முதல் பெண் பக்தர்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PinarayiVijayan #Sabarimalaverdict 
Tags:    

Similar News