செய்திகள்

காந்தி ஜெயந்தி அன்று கோட்சேவுக்கு சிலை வைக்க முயற்சி - 4 பேர் கைது

Published On 2018-10-03 05:14 GMT   |   Update On 2018-10-03 05:14 GMT
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சிலையை காந்தி ஜெயந்தி தினத்தில் வைக்க முயன்றதால் 4 பேர் கைது செய்யப்பட்டனர். #GandhiJayanti #MahatmaGandhi
அலகாபாத்:

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் உருவ சிலையை வைக்க முயற்சி நடந்தது.

உத்தரபிரதேச மாநிலம் சித்ரா கூட் மாவட்டத்தில் சக்வாரா என்ற கிராமத்தில் ராஷ்டீரிய சனாதன் தள் அமைப்பினர் கோட்சே சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ராஷ்ட்டீரிய சனாத்தன் தள் அமைப்பின் சித்ரகூட் மண்டல தலைவர் ராமேந்திராவுக்கு சொந்தமான இடத்தில் அந்த சிலை நிறுவப்பட இருந்தது.

அதை அறிந்த கிராம மக்கள் உஷாராயினர். இது குறித்து சித்ரகூட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமாரிடம் புகார் செய்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கோட்சே சிலையை நிறுவ விடாமல் தடுத்து நிறுத்தினர். சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

அது தொடர்பாக ராஷ்ட்டீரிய சனாதன் தள் அமைப்பின் நிறுவன உறுப்பினர் மற்றும் இணை அமைப்பாளர் பிரிஜேஷ் பாண்டே உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

அவர்களில் 2 பேர் சித்ராகூட் பகுதியை சேர்ந்தவர்கள் ஒருவர் புஷார் பகுதியையும், மற்றொருவர் பாண்டா மாவட்டத்தையும் சேர்ந்தவர் ஆவார். கோட்சே சிலை நிறுவ இருந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #GandhiJayanti #MahatmaGandhi
Tags:    

Similar News