செய்திகள்

ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம்

Published On 2018-10-01 19:33 GMT   |   Update On 2018-10-01 19:33 GMT
ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் எனும் இந்தியரை நியமித்து அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #IMF #GitaGopinath
புதுடெல்லி :

பன்னாட்டு நிதியம் என அழைக்கப்படும் ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இத்தகவலை ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்துள்ளார்.

தற்போது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத்துறையில் பேராசிரியராக கீதா கோபிநாத் பணியாற்றி வருகிறார்.

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார். பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டன், பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் நியூயார்க் உள்ளிட்ட வங்கிகளின் பொருளாதார ஆலோசனை குழுவிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.

மேலும், பொருளாதார பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியராகவும் உள்ள இவர், 40-க்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

கீதா கோபிநாத் கடந்த 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றார். தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் கீதா முடித்தார்.

அதன்பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராகச் சேர்ந்த கீதா கோபிநாத், 2005-ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கு மாறினார். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பிறகு ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது. #IMF #GitaGopinath
Tags:    

Similar News