செய்திகள்

இந்துத்துவம் ஒரு ஜாதிக்கானது அல்ல என்பதை சபரிமலை தீர்ப்பு நிரூபித்துள்ளது - மேனகா காந்தி

Published On 2018-09-28 09:51 GMT   |   Update On 2018-09-28 09:51 GMT
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, மத்திய மந்திரி மேனகா காந்தி, கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஜெயமாலா ஆகியோர் வரவேற்றுள்ளனர். #Sabarimala #SabrimalaVerdict #SupremeCourt #ManekaGandhi
புதுடெல்லி:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய அமர்வு, சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை தகர்த்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல. இந்த தடை இந்து பெண்களின் உரிமைக்கு எதிரானது’ எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தீர்ப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி வரவேற்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேனகா காந்தி, ஒரு குறிப்பிட்ட பாலினம் அல்லது சமூகத்துக்கு மட்டுமே இந்து மதம் என்ற தடை அகற்றப்பட்டு, இந்துத்துவம் ஒரு ஜாதிக்கானது அல்ல என்பதை சபரிமலை தீர்ப்பு நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ளார்.



இதேபோல், சபரிமலை கோவிலுக்கு அனைத்து பெண்களும் நுழையலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஜெயமாலா குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறைக்கும், உச்சநீதிமன்றத்துக்கும், சட்டவிதிகளை இயற்றிய அம்பேத்கருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள ஜெயமாலா, தற்போதுதான் பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாட்டின் பல்வேறு அமைப்புகளும், தலைவர்களும் வரவேற்று வரும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை அர்ச்சகர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார். #Sabarimala #SabrimalaVerdict #SupremeCourt #ManekaGandhi
Tags:    

Similar News