செய்திகள்

மனைவிகளிடம் இருந்து கணவர்களை காக்க தனி ஆணையம் - பா.ஜ.க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Published On 2018-09-02 11:40 GMT   |   Update On 2018-09-02 11:40 GMT
மனைவிகளின் கொடுமைகளில் இருந்து கணவர்களை காக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். #BJP #AnshulVerma #HarinarayanRajbhar
லக்னோ:

சட்டங்களை தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பா.ஜ.க எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக ஆதரவு திரட்ட இம்மாதம் 23-ம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக எம்.பி ஹரிநாராயன் ராஜ்பர் பேசுகையில், ‘மனைவிகளால் ஆண்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள். இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளது. பெண்களுக்கு நீதி கிடைக்க சட்டம் மற்றும் ஆணையம் உள்ளது. ஆனால் ஆண்களுக்கென்று இதுவரையில் அப்படி கிடையாது. தேசிய பெண்கள் ஆணையம் போன்று ஆண்களுக்கு என்றும் தனியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

மற்றொரு எம்.பி.யான அன்சுயல் வர்மா கூறுகையில், ‘இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளேன். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-யில் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

கணவன் மற்றும் அவருடைய உறவினர்களால் பெண்கள் வரதட்சணை போன்ற கொடுமைப்படுத்தப்படுதல் இப்பிரிவில் அடங்குகிறது. இந்த சட்டப்பிரிவு ஆண்களை இலக்காக்க தவறாக பயன்படுத்தப்படுகிறது. 1998 முதல் 2015-ம் ஆண்டு வரையில் இதுபோன்ற விவகாராங்களில் தவறாக 27 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்’ என தெரிவித்துள்ளார். #BJP #AnshulVerma #HarinarayanRajbhar
Tags:    

Similar News