செய்திகள்

தேச துரோகத்தில் ஈடுபட்டதாக சித்து மீது கோர்ட்டில் புகார் மனு

Published On 2018-08-20 19:54 GMT   |   Update On 2018-08-20 19:54 GMT
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் தேச துரோகத்தில் ஈடுபட்டதாக சித்து மீது புகார் மனு தாக்கல் செய்தார். #NavjotSinghSidhu
முசாபர்பூர்:

கடந்த 18-ந்தேதி நடந்த பாகிஸ்தான் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை கட்டித் தழுவினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.



சித்துவின் இந்த செயலுக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் புகார் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் பலர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணமான பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை சித்து கட்டித் தழுவி இருப்பது என்னைப்போன்ற ஏராளமான இந்தியர்களின் உணர்வை காயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது, நாட்டுக்கு தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கேலி செய்வதாகவும் உள்ளது. எனவே சித்து மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு வருகிற 24-ந்தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார்.  #NavjotSinghSidhu
Tags:    

Similar News