செய்திகள்

கொச்சிக்கு விமான சேவை தொடங்கியது - கடற்படை தளத்தில் தரையிறங்கியது முதல் விமானம்

Published On 2018-08-20 03:16 GMT   |   Update On 2018-08-20 03:16 GMT
கொச்சியில் மழை வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து இன்று விமான சேவை தொடங்கியது. #KeralaRains #KochiAirport
கொச்சி:

கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கனமழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அணைகள் அனைத்தும் நிரம்பி அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காணப்படுகிறது. முப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து  உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் சென்ற வண்ணம் உள்ளன.



இந்த நிலையில் கடலோர மாவட்டமான கொச்சியில் இடைவிடாமல் மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் கொச்சி விமான நிலையம் கடந்த 14-ம் தேதி மூடப்பட்டது. இதனால் கொச்சி வர  வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் அல்லது கோழிக்கோடு விமான நிலையத்துக்கு திருப்பி  விடப்படுகின்றன.

இந்நிலையில் கொச்சி விமான நிலைய வளாகத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடியாத நிலையில், கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தை, பயணிகள் விமானம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விமானப்படை  விமானங்கள் வந்து செல்வதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.  அதன்படி இன்று முதல் கொச்சி கடற்படை விமான தளத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டது. கடற்படை தளத்தில் முதல் வர்த்தக விமானம் இன்று காலை தரையிறங்கியது. #KeralaRains #KochiAirport #KochiNavalAirStation 
Tags:    

Similar News